Tuesday, March 13, 2018

இனி கூகிள் ஆட்சென்ஸ் மூலம் தமிழில் எழுதியே சம்பாதிக்க முடியும்

இணையத்தில் ஆங்கிலத்தில் எழுதினால் நிறைய சம்பாதிக்கலாம். நிறைய பேர் சம்பாதித்தும் வருகின்றனர். ஆனா தமிழில் எழுதினால் அந்த அளவிற்கு சம்பாதிக்க முடியாது. இந்த பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இனிமே இந்த பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன்.

காரணம் கூகிள் ஆட்சென்ஸ் மூலம் இனிமே தமிழில் எழுதுபவர்களும் சம்பாதிக்கலாம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

சரி கூகிள் ஆட்சென்ஸ் என்றால் என்ன? 

இதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் கூகிள் ஆட்வர்ட்ஸ் (Google Adwords) பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். நம்மாட்களுக்கு எது தேவையென்றாலும் கூகிளில் தேடி தெரிந்துகொள்கிறார்கள். அப்படி தேடும்போது சில வெப்சைட்டுகள் மட்டுமே முதல் பேஜில் வரும். சில வெப்சைட்டுகள் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது.. பத்தாவது பேஜ்களில் வரும்.

உங்கள் வெப்சைட்டும் முதல் பேஜில் வர வேண்டுமா? அதுக்கு கொஞ்சம் செலவாகும். முதல் பேஜில் முதல் மூன்று இடங்களை விளம்பரத்திற்காக ஒதுக்கினார்கள். இப்படி விளம்பரம் செய்பவர்கள் கூகிள் ஆட்வர்ட்ஸ் மூலமாக செய்யலாம்.

Image courtesy : www.sharetribe.com


ஆரம்பத்தில் கூகிள் தேடல் முடிவுகளாக மட்டுமே இந்த விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன. பிறகு என்ன செய்தார்கள், மத்தவய்ங்க வெப்சைட்லையும் ஒரு ஓரமா விளம்பரம் போட்டா (Google Adwords Display ads) நறையா சம்பாதிக்கலாம்ல என்று யோசித்தார்கள். அவனுங்களுக்கு நாம சம்பாதிக்கறதுல ஒரு பங்கு குடுத்துருவோம் என்று யோசித்து கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்ற திட்டத்தை அறிவித்தார்கள்.

Courtesy : http://www.globalmarketingsupport.com


கூகிள் ஆட்வர்ட்ஸின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்கள் விளம்பரத்தை எத்தனை பேர் வேண்டுமானாலும் பார்க்கட்டும். அதற்கு எந்த கட்டணமும் கட்டத்தேவையில்லை. யாராவது க்ளிக் செய்தால் மட்டும் பணம் தாருங்கள் போதும் என்று கூறினார்கள். (Click per cost) ஒரு க்ளிக்குக்கு பத்து ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று keyword competitionக்கு ஏத்த மாதிரி பணம் வசூலிப்பார்கள்.

இதே தான் உங்க வெப்சைட்ல நீங்க போட்ற விளம்பரத்துக்கும். யாராவது க்ளிக் பண்ணா தான் காசு. உங்க வெப்சைட்டுக்கு ஆயிரம் பேர்கூட ஒரு நாளைக்கு வரட்டும். அதுல எத்தனை பேர் க்ளிக் பண்றானோ அதுக்கு ஏத்த மாதிரி மாத இறுதியில் காசு வழங்கப்படும்.

முன்னாடிலாம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை செக்காக அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இப்ப உங்க பேங்க் அக்கவுண்ட்லயே கிரெடிட் பண்ணிடறாய்ங்க.

நம்மாளுங்க கொஞ்சம் கொடூரமானவய்ங்க. நானே நாப்பது க்ளிக் பண்ணி சம்பாதிப்பேனாக்கும்னு யோசிச்சாய்ங்க. கூகிள் என்ன லூசா? அவன் cookie மூலமாக இதைக் கண்டுபுடிச்சிருவான். cookie என்பது ஒருவகையான script. நீங்க எப்பப்ப எந்தெந்த வெப்சைடுக்கு போறீங்கன்னு இந்த cookie காட்டிக்கொடுத்துவிடும். அதுமட்டுமல்லாமல் உங்கள் ஐபி அட்ரஸ் போன்ற பல தகவல்களை வைத்து நீங்களே க்ளிக் பண்றீங்களான்னு அவன் கண்டு புடிச்சிருவான்.

நம்மாட்கள் இன்னும் கொஞ்சம் புத்திசாலி. நான் க்ளிக் பண்ணாதானே, தூத்துக்குடில எங்க மச்சான் இருக்கான் அவன்கிட்ட சொல்லி க்ளிக் பண்ணா என்று குரூரமாக திங்க் பண்ணுவார்கள். யார் பண்ணாலும் அவன் கண்டுபுடிச்சிருவான். டிசைன் அப்டி. சோ ரிஸ்க் எடுக்காதீங்க.

சரி கண்டுபுடிச்சா கண்டு புடிச்சிட்டு போறான். எனக்கென்ன வந்துச்சின்னு கேக்கறீங்களா? கண்டுபுடிச்சா உங்க அக்கவுண்டை க்ளோஸ் பண்ணிருவான். இதுவரைக்கும் நூறு டாலர் சம்பாதிச்சிருக்கீங்கன்னு வைங்க. அது அத்தனையும் போயிரும். அவன் உங்க பேங்க் அக்கவுண்டுக்கு காசு போட்றதுக்கு முன்னாடி இதையெல்லாம் செக் பண்ணுவான்.

சில பேர் இது மாதிரி ஆயிரம் டாலர், ரெண்டாயிரம் டாலர்லாம் இழந்துருக்காங்க. எனவே சிங்கிள் டீக்கு ஆசைப்பட்டு உயிர விட்றாதீங்க.

இது மாதிரி நறையா பாலிசி வெச்சிருக்கான்.

சரி இதையெல்லாம் எதுக்கு சொல்றேன்? இன்னைக்கு சென்னைல கூகிள் நிறுவனம் சார்பாக Event ஒன்று நடத்தினார்கள். கூகிள் ஆட்சென்ஸ் தமிழில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது. எப்படி சம்பாதிக்கலாம், கூகிள் தேடுதளம் எப்படி வேலை செய்கிறது போன்ற பல தகவல்களை சொன்னார்கள். நாங்களும் எங்கள் சந்தேகத்தைக் கேட்டோம்.




இந்திய மொழிகளில் இந்தி, பெங்காலியில் ஏற்கனவே ஆட்சென்ஸ் இருக்கிறது. இப்போது தான் முதல்முறையாக தமிழில் கொண்டு வருகிறார்கள். சொல்லப்போனால் தமிழ் bloggerகளின் பொற்காலம் என்பது 2004ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரை என்று சொல்லலாம். அப்போதெல்லாம் கேபிள் சங்கர், அதிஷா, யுவகிருஷ்ணா என்று பலரும் கொடிகட்டிப்பறந்தார்கள். நிறைய சண்டை நடக்கும், ரத்தக்களறியெல்லாம் ஏற்பட்டு, ஞாயிறு மாலை மெரினாவில் சந்தித்து டீ குடித்துவிட்டு அரட்டையடித்துவிட்டு கலைந்தார்கள்.

அதே காலக்கட்டத்தில் ஆங்கிலத்தில் எழுதிய ப்ளாக்கர்கள் கூகிள் ஆட்சென்ஸ் மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதித்தார்கள். ஆனால் தமிழில் ஆட்சென்ஸ் இல்லை. நம்மாட்களும் காத்திருந்தார்கள். எதுவுமே நடக்கவில்லை. தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக நாம் புறக்கணிக்கப்பட்டோம் என்பதாக உணர்ந்தார்கள். இதற்கு இலுமினாட்டிகளின் சதிகூட காரணமாக இருக்கலாம்.

பின்னர் பேஸ்புக் வந்தது. பல புதிய எழுத்தாளர்கள் உருவானார்கள். லைக், கமெண்ட் ஷேர் என்று வந்தது. லைக் போட்டி அதிகமானது. பேஸ்புக் கமெண்ட் பாக்சிலேயே அடித்துக்கொண்டோம். இன்பாக்ஸில் முத்தங்கள் பரிமாறப்பட்டதால், blogகள் காத்தாடியது. ஒன்றிரண்டு ப்ளாக்கர்கள் பத்திரிக்கைகளில் வேலை கிடைத்து பிசியானார்கள். கேபிள் சங்கர் திரைப்படம் இயக்கினார். ஆட்சென்ஸ் மூலம் வருமானம் இல்லையென்றாலும் வேறுசில பிரகாசமான வாய்ப்புகள் உண்டு என்பதை இவ்விடம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனவே உழைப்புக்கான பலன் என்றாவது ஒரு நாள் கிடைத்தே தீரும்.

பின்னர் யூடியூப் வருகைக்குப்பிறகு, தமிழில் வீடியோ போட்டால் சம்பாதிக்கலாம் என்ற நிலை உருவானது. எனவே சில திடீர் வீடியோ சேனல்கள் தோன்றி நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று உலகிற்கு எடுத்துரைத்தார்கள். இலுமினாட்டிகளின் சிறப்பம்சம் பற்றி பாடமெடுத்தார்கள்.

என்னால வீடியோ போட முடியாது, பேஸ்புக்ல சும்மா ஒரு ஓரமா எழுதிகிட்டு இருப்பேன் என்பவர்கள் இனி blog ஆரம்பிக்கலாம். ஆரம்பிக்க வேண்டும் என்பதே என் அறிவுரை. அங்கன எழுதுனா எதுவும் கிடைக்காது இங்கன எழுதுனாலாவது எதாவது தேறும். இன்னொன்று நான் பேஸ்புக்கில் ஏழு வருடமாக எழுதி வருகிறேன். திடீர்னு 2014ல் என்ன எழுதினேன் என்று தேட வேண்டுமென்றால் scroll பண்ணி scroll பண்ணி பைத்தியம் புடிச்சிரும்.

blogல் அந்த கவலை இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்து பார்த்துக்கொள்ளலாம். பேஸ்புக்கில் நம் பதிவைப் படிப்பவர்கள் ஆயிரம் பேராக இருக்கும். ஆனால் நூறு பேர் தான் லைக் போடுவார்கள். எனவே எத்தனை பேரை நம் கருத்து சென்றடைந்தது என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால் blogஐ பொறுத்தவரை analytics என்ற ஒரு option இருக்கிறது. இதன் மூலம் எத்தனை பேர் வந்தார்கள். பேஸ்புக் மூலமாக வந்தவர்கள் எத்தனை போன்ற தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். இது போல பல சிறப்பம்சங்கள் இருக்கிறது.

தமிழில் எழுதுபவர்களும் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அளவுக்கு நூற்றுக்கணக்கான டாலர்கள் சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை யாராவது அப்படி சம்பாதித்தால், திடீர் திடீரென youtube channelகள் முளைத்தது போல blogகளும் முளைக்கக்கூடும்.

இது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள தனியே யூடியூப் சேனல் ஒன்றைத் துவங்கியுள்ளேன். லிங்க் இதோ - TamilSEO